Wednesday, October 29, 2008

யாரவள்


பூக்களை பறித்து விட்டு

புன்னகைக்கிறவர்களை

ரசிப்பதில்லை அவள்

கை வீசினால்

காற்றுக்கும் வலிக்குமென்று

நடப்பவள்

என்னவள்

Tuesday, October 28, 2008

போர்வை


வாடைக்காற்று வீசும்

மார்கழி பின்னிரவில்

சுகமாய் தூங்குகிறேன்

உனக்குள் நான்

Monday, October 20, 2008

நானும் அவைகளும்


அதிகாலை மெல்லிருட்டில்

உன் வீட்டு

முல்லைப் பூக்களும்

நானும்

காத்திருக்கிறோம்


அவைகள் பறிக்கப்படவும்

நான் பறிக்கப்பட்டத்திற்காகவும்


Monday, October 6, 2008

பனிக்காலம்


பின்னிரவின் வாடைக்காற்று

மெல்ல பின் வாங்கும்

இடைவிடாது நாய்கள் குரைக்கும்

நடு வீதியை தாண்டி

விசுவாசமாய் தொடரும்

மங்கிய நிலா வெளிச்சத்தில்

உன் வீடு

அழகாய் இருக்க்கிறது


உனக்கானவை

நீண்ட இடைவெளியை கடந்து

கவிதை எழுதுகிறேன்.

மொழியில் சரளம்

சற்றே பிடிபட மறுக்கிற‌து

வார்த்தைகள் தொண்டையில்

சிக்கிக் கொண்ட முள்ளாய்

முரண்டு பிடிக்கிறது

எதுகையும் மோனையும்

எதிரெதிரே ப‌யணிக்கின்ற‌ன‌.

ச‌ந்திப் பிழைக‌ளும்

ச‌ந்த‌ப் பிழைக‌ளும்

ச‌க‌ஜ‌மாகி விட்டன

இல‌க்க‌ண‌ம் சேராத

வரிக‌ள் என்றாலும்

அழ‌காய் இருக்கிற‌து

உன்னை ப‌ற்றிய‌

க‌விதை


சீண்டல்

நான் தாமதமாய்

வந்ததற்காக

கோபித்துக் கொள்கிறாய் .

மன்னித்து விடு...

நாளையும் தாமதமாகத்தான்

வரப் போகிறேன்.

உன் செல்ல கோபத்தை ரசிக்க

Friday, October 3, 2008

அச்சச்சோ...!


அச்சச்சோ...!

இது கூட தெரியலையா ?

சத்தமிட்டு நகைக்கிறாய்

தெரிந்ததை கூட

தெரியாது என்பது

காதலின் முக்கிய விதி .

தெரியாதா எனக்கு.

Thursday, October 2, 2008

விடுபட்டவள்

கடல்

யானை

குழந்தை

எத்தனை முறை பார்த்தாலும்

சலிக்காது என்பார்கள்.

எப்படி மறந்தார்கள் ?

உன்னை

இந்த பட்டியலில் சேர்க்க.....